Wednesday, May 09, 2012

யோகாசனத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் யோகா செய்வதற்கு வயதில்லை

யோகாசனத்தின் கட்டுப்பாடுகள் 
• சாப்பிட்டு குறைந்தது 4 மணி நேரம் சென்ற பிறகும். காபி, டீ, குடித்தால் 1 மணி நேரம் கழிந்த பின்பும் ஆசனங்கள் செய்யலாம்.

• இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், நீண்ட தூரம் பயணம் செய்த நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள் மற்றும் உடல் சோர்வு, தலைவலி, இருக்கும் போதும் ஆசனங்கள் செய்யாது சாந்தி ஆசனம் மட்டும் செய்யலாம்.


• யோகப் பயிற்சி செய்பவர்கள் உருளைக் கிழங்கு மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

• வெறும் தரையில் யோகா பயிற்சி செய்யக் கூடாது . பாய் (அ) விரிப்பு விரித்து தான் செய்ய வேண்டும்.


• காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களாகிய சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், பல் துலக்குதல் போன்றவற்றைச் செய்த பின்பே ஆசனம் பயில வேண்டும்.

• யோகாசனம் செய்யும் முன்போ அல்லது செய்த உடனேயோ குளிப்பது ஏற்றதல்ல.

• உடல் உறவு கொள்ளும் நாட்களிலும் ஆசனம் செய்தல் கூடாது.

• வயிற்றில் வலி உடையவர்கள் யோகாசனம் செய்தல் கூடாது.

• தலைவலி இருக்கும் நாட்களில் ஆசனம் செய்ய வேண்டாம்.

• திறந்த வெளியில் அல்லது காற்றோட்டமான அறையில் ஆசனம் செய்தல் வேண்டும். காபி, டீ, புகையிலை, லாகிரி வஸ்துகள், மது அறவே கூடாது.


• யோகாசனம் செய்யும் போது வேறு உடற்பயிற்சி கூடாது.

• இதய நோயுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர் ஆலோசனையுடன் யோகாசனத்தைத் தேர்வு செய்து செய்தல் நன்று.

•  யோகாசனத்தைத் தினமும் அரை மணி முதல் இரண்டு மணி வரை செய்து பழகலாம். 

• யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் இரண்டு நிமிடம் அமைதியாக பத்மாசனம் (அ) சுகாசனத்தில் அமரவும்.


யோகாவிற்கு வயதில்லை
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கேற்றபடி யோகா செய்தால் நிம்மதியாக வாழலாம். குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை நுரையீரலே உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. கல்லீரலும், பித்தப்பைகளும் அதற்கு உறுதுணையாக இருக்கிறது. இவர்களுக்கு மார்புச்சளி, பசியின்மை, ஆஸ்துமா, செரியாமை, மலச்சிக்கல், வயிற்றுப் பூச்சி ஆகியவை ஏற்படலாம். 7 வயது முதல் யோகாசன பயிற்சியை ஆரம்பித்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். 

• 10 முதல் 20 வயதுள்ளவர்கள் யோகாசன பயிற்சிகளோடு பிராணாயாமம், தியானம், கண் பயிற்சிகள் செய்ய வேண்டும். இது ஒழுக்க கட்டுப்பாடு வளர வேண்டிய முக்கியமான பருவம். 

• 20 முதல் 30 வயது வரையான பருவம் இளம் பருவம். என்றாலும் இதுதான் முதுமையின் தொடக்கமும் கூட. பின்னால் வளைந்து செய்யும் ஆசனங்களை செய்ய வேண்டும். இதனால் முதுகுத்தண்டு பலம் பெறும். மூளையும் சுறுசுறுப்புடன் இயங்கும். இந்த வயதில் பகலில் உறங்காமல் இருக்க வேண்டும். அப்படி பகலில் உறங்கினால் மூளை மந்தமாக இயங்கும். 


• 30 முதல் 40 வயதுக்குள்ளாக உடல் இளமையை இழக்கத் தொடங்கும். புருவங்களுக்கு மத்தியில் சுருக்கம் தோன்றும். யோகாசனம் மற்றும் பிராணாயாம பயிற்சிகளை தொடர்ந்து வர வேண்டும். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளும் மிகவும் அவசியம். 

• 40 முதல் 50 வயதிற்குள்ளாக கண்களுக்கு பக்கத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும். தவறாது யோகாசனங்கள் செய்து வர வேண்டும். பெண்களும் யோகா செய்து வந்தால் மெனோபாஸ் பருவத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கால் கருப்பையை அகற்ற வேண்டிய அளவுக்கு சிக்கல் வராமல் தடுக்கலாம். 


• 50 வயதுக்கு மேல் பெரும்பாலானவர்களின் உடல் வியாதிகளின் சங்கமமாக மாறிவிடும். காதுகள் கேட்கும் ஆற்றல் குறைய ஆரம்பிக்கும். இதய நோய்கள் அதிகரிக்கும். எலும்பு முறிவு, சளி பிடித்தல் போன்ற கோளாறுகள் தோன்ற ஆரம்பிக்கும். தினம் தவறாது விபரீதகாரணி, பத்ராசனம் போன்ற ஆசனங்கள் செய்ய வேண்டும். சிறு வயது முதலே யோகாசனம் செய்து வந்திருந்தால் இவற்றில் பெரும்பாலான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். 
Download As PDF

No comments:

Post a Comment